இயற்கை எரிவாயு குழாய் ஒப்பந்தம் : முரளி தியோரா பாக். பயணம்!

புதன், 9 ஏப்ரல் 2008 (16:57 IST)
ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு அமைக்கப்பட உள்ள இயற்கை எரிவாயு குழாய் பற்றி பேச்சு வார்த்தை நடத்த மத்திய பெட்ரோலியம் அமைச்சர் முரளி தியோரா வருகின்ற 21 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு வர இருப்பதாக இஸ்லாமாபாத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானுக்கு வரும் முரளி தியோரா, பாகிஸ்தானின் வழியாக கொண்டுவரப்படும் இயற்கை எரிவாயுவிற்கு போக்குவரத்து கட்டணம் பற்றி பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப்வுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்லாமாபாத்தில் இன்று சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் இயற்கை எரிவாயு தொழில் கருத்தரங்கை அமைச்சர் ஆசிஃப் தொடங்கி வைத்தார். அப்போது தியோரா பயணம் பற்றி கேட்ட போது,. தான் புதிதாக பதவி ஏற்றுள்ளதாகவும், இதன் விபரங்கள் தெரிவிக்க இயலாது என்றும் மறுத்து விட்டார்.

பாகிஸ்தானுக்கும், ஈரானுக்கும் இடையே இந்த திட்டத்தின் கீழ் ஈரானில் இருந்து வாங்க போகும் இயற்கை எரிவாயு விலை இறுதி செய்யப்பட்டு விட்டன. இந்தியா இயற்கை எரிவாயு போக்குவரத்து கட்டணம் பற்றி இறுதி முடிவு செய்யவில்லை. இதனால் இந்த திட்டத்தில் இந்தியா இணையாமல் உள்ளது.

இந்த திட்டத்தில் இருந்து இந்தியா வெளியேறும் பட்சத்தில், அதில் சீனா இணைய தயாராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்று துபாயில் மெகர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஈரான் பெட்ரோலிய அமைச்சர் ஹோலம் ஹூசைன் நஜோரி, ஈரான் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தில் முக்கிய கூட்டாளி என்றும், இதற்கு எதிராக மற்ற நாடுகளில் இருந்து வரும் நிர்பந்தங்களை நிராகரிக்க போவதாக இந்தியா உறுதி அளித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,. இந்தியாவுக்கு இயற்கை எரிவாயு அனுப்புவது அதிக முக்கியமானது என பாகிஸ்தானுக்கு, ஈரான் கடிதம் எழுதியுள்ளது என்று தெரிவித்தார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி, இந்த திட்டத்தில் இருந்து இந்தியா விலக வேண்டும் என்று அமெரிக்கா இந்தியாவுக்கு நிர்ப்பந்தம் செலுத்தி வருகிறது. இதற்கு பதிலளித்த ஈரான், அணு சக்தி மின் உற்பத்திகாக தான் பயன்படுத்தப்படும். அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்காக அல்ல என்று வலியுறுத்தி கூறிவருகிறது.

ஈரானில் இருந்து பாகிஸ்தான், இந்தியாவுக்கு இயற்கை எரிவாயு கொண்டுவர 2,775 கி.மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைக்கப்படுகிறது. இந்த திட்டம் மூன்று முதல் ஐந்து வருடங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எரிசக்தி பற்றாக்குறை நிலவும் பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரு நாடுகளுமே பலன் பெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்