ஒரு கால வரையறைக்குள் அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் : இந்தியா!
புதன், 9 ஏப்ரல் 2008 (14:23 IST)
அணு ஆயுதப் பரவலைத் தடுக்கவும், அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்கவும் ஒரு கால வரையறைக்கு உட்பட்ட திட்டத்தை ஏற்றுக்கொண்டு அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்க அணு ஆயுத வல்லரசுகள் முன்வரவேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது!
ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதங்கள் ஒழிப்பு ஆணையத்தின் மாநாட்டின் பேசிய ஐ.நா.விற்கான இந்தியத் தூதர் நிருபம் சென், அணு ஆயுதமற்ற உலகத்தை உருவாக்க இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கை அவசியமானது என்று கூறினார்.
அணு ஆயுத ஒழிப்பின் முதற்கட்டமாக, முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் என்கின்ற உறுதிமொழியை அணு ஆயுத நாடுகள் ஒரு உலகளாவிய உறுதியாக ஏற்க வேண்டும் என்று சென் வலியுறுத்தினார்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியப் (முன்னாள்) பிரதமர் ராஜீவ் காந்தி அளித்த நடவடிக்கைத் திட்டமே இப்பிரச்சனையில் இதுவரை அளிக்கப்பட்ட திட்டங்களில் மிக விரிவானதாகும் என்றும் சென் கூறினார்.
அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு ஒரு செய்தியை ஐ.நா. ஆணையம் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நிருபம் சென், விபத்தாக அணு ஆயுதப் போர் வெடிக்கும் ஆபத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் அணு ஆயுத நாடுகளுக்கு உள்ளது என்று கூறினார்.