சர்வதேச நாடுகளின் ஆதரவு தொடர வேண்டும்: தலாய் லாமா!
வியாழன், 3 ஏப்ரல் 2008 (15:55 IST)
திபெத்தில் சீனப் படைகளின் அடக்குமுறை நடவடிக்கைகள் உடனடியாக முடிவிற்கு வரவேண்டும் என்ற கோரிக்கைக்கு சர்வதேச நாடுகள் அளித்துவரும் ஆதரவு தொடர வேண்டும் என்று திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தர்மசாலாவில் இருந்து நேற்றிரவு தலாய் லாமா விடுத்துள்ள அறிக்கையில், "தன்னாட்சி பெற்ற திபெத் என்று அறியப்படும் பகுதிகளைத் தவிர, யுன்னான், சிச்சுவான், கன்சு, கிங்காய் போன்ற பாரம்பரிய திபெத் பகுதிகளிலும் சீன அரசிற்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. அங்குள்ள மக்களும் சீன ஆதிக்கத்தை விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.
"இந்தப் பாரம்பரிய திபெத் பகுதிகளிலும் சீனா தனது படைகளைக் குவித்துள்ளது. இப்படையினர் போராட்டக்காரர்களை அடக்குவதோடு மட்டுமன்றி, அப்பகுதிகள் முழுவதையும் முடியுள்ளனர். இதனால் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது" என்று அவர் குற்றம்சாற்றியுள்ளார்.
மேலும், "சீனா தனது அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும். கைது செய்யப்பட்டு உள்ளவர்களை விடுவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணத்தையும், மருத்துவ உதவிகளையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.
திபெத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுதந்திரமான சர்வதேச அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்பதையும், அப்பகுதிகளுக்கு ஊடகவியலாளர்களுடன் சர்வதேச மருத்துவக் குழுவினரையும் அனுப்ப வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்" என்று தலாய் லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.