திபெத் விவகாரம்: இந்தியாவிற்கு சீனா பாராட்டு!
வியாழன், 3 ஏப்ரல் 2008 (12:46 IST)
திபெத் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை சீனா பாராட்டியுள்ளது.
சீனாவுடன் இந்தியாவிற்கு உள்ள நல்லுறவை பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று தலாய் லாமாவை இந்தியா வலியுறுத்தியுள்ளதை சீனா வரவேற்றுள்ளது.
இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சீன அயலுறவு அமைச்சர் யாங் ஜியிச்சி, திபெத்தின் தற்போதைய நிலையை விளக்கியதுடன், இருதரப்பு நல்லுறவுகள், ஒலிம்பிக் சுடரின் பயணம் ஆகியவை பற்றியும் விவாதித்துள்ளார்.
திபெத் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டைப் பாராட்டிய ஜியிச்சி, இந்த ஆதரவு இறுதிவரை தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக, தலாய் லாமா இந்தியாவின் மரியதைக்குரிய விருந்தாளி என்ற முறையில் அவருக்குத் தேவையான எல்லா வசதிகளும் செய்து தரப்படும் என்றும், ஆனால் அவர் இந்திய- சீன நல்லுறவைக் கெடுக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.