அமெரிக்க சுற்றுச்சூழலில் இந்தியாவின் பங்களிப்பு அதிகம்: பெலோசி!
புதன், 2 ஏப்ரல் 2008 (18:44 IST)
உலக தட்பவெப்ப நிலையில் இந்தியாவின் அணுகுமுறை அமெரிக்காவின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அதிக பங்களிக்கிறது என்று அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி கூறினார்.
சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் தனது பயணம் குறித்துக் கூறுகையில், "இந்த சுற்றுப்பயணத்தில் நான் அதிகம் கற்றுக்கொண்டேன். இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக இந்த சுற்றுப்பயணத்தை நான் மேற்கொண்டேன்.
இந்தியாவில் 40 கோடி மக்கள் மின்சார வசதியின்றி வாழ்கின்றனர். ஆனாலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா பொறுப்புகளை உணர்ந்து, தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த அணுகுமுறைதான் அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் அதிகப் பங்களிக்கிறது" என்றார்.
திபெத் விவகாரம் குறித்துக் கேட்டதற்கு "சீன அரசு தலாய் லாமாவுடன் இணைந்து திபெத்தில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும். தலாய் லாமாவை வன்முறையை தூண்டுபவராக சீன அரசு கருதுகிறது. ஆனால், அவர் வன்முறைக்கு எதிரானவர். திபெத் விவகாரத்தில் சீனாவின் சுயாட்சிக்கும், செயல்பாட்டிற்கும் அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும்" என்றார்.