மூன்று தவறுகளை செய்துவிட்டேன் - சந்திரிகா குமாரதுங்கா!
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (16:19 IST)
சிறிலங்க குடியரசுத் தலைவராக இருந்த 9 ஆண்டு காலத்தில், ஜனதா விமுக்தி பெரமுணா கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது உட்பட மூன்று பெரும் தவறுகளைச் செய்துவிட்டதாக சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்!
சிங்கள வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ஜே.வி.பி.யுடன் கூட்டு சேர்ந்தது மட்டுமின்றி, 2004 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியைக் கலைத்தது மற்றொரு தவறு என்று சந்திரிகா ஒப்புக்கொண்டுள்ளார்.
குடியரசுத் தலைவராக இருந்தபோது தான் செய்த மூன்றாவது தவறு என்ன என்பதை எதிர்காலத்தில் கூறயிருப்பதாக சந்திரிகா கூறியுள்ளார்.
சந்திரிகாவின் சகோதரரும், முன்னாள் அயலுறவு அமைச்சருமான அனுரா பண்டாரநாயக்கா சமீபத்தில் காலமாகிவிட்ட நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பண்டாரா நாயக்கா குடும்பத்தின் உறுப்பினர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆயினும், தானோ அல்லது தனது சகோதரி சுமித்ராவோ தீவிர அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று சந்திரிகா கூறியுள்ளார்.
சந்திரிகா குமாரதுங்கா குடியரசுத் தலைவராக இருந்தபோதுதான், இலங்கை இனப்பிரச்சனை அமைதி தீர்வு காண்பதற்கு முதல்கட்டமாக வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்து இடைக்கால நிர்வாக அமைப்பை ஏற்படுத்துவதற்கு விடுதலைப் புலிகள் தங்களது திட்டத்தை அளித்தனர். ஆனால், அத்திட்டத்தை எவ்வித பரிசீலனைக்கும் உட்படுத்தாமல் சந்திரிகா குமாரதுங்கா கிடப்பில் போட்டார். அதன் காரணமாகவே அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் குறிப்பிடும் மூன்றாவது தவறு என்பது இதுவாகவோ அல்லது தனக்குப் பிறகு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு மகிந்த ராஜபக்சேயைக் கொண்டு வந்ததோ இருக்கக்கூடும் என்று யூகிக்கப்படுகிறது.