அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் பழங்குடியினர் எச்சரிக்கை!
வியாழன், 27 மார்ச் 2008 (14:31 IST)
பாகிஸ்தானில் பழங்குடியினர் பகுதிகளில் அமெரிக்கப் படைகள் நேரிடையாக களமிறங்கி பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று பழங்குடியினத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
௦பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அயலுறவு இணை அமைச்சர்கள் ரிச்சர்ட் பெளச்சர், ஜான் நெக்ரோபோன்டே ஆகியோர் நேற்று இஸ்லாமாபாத்தில் பழங்குடியினத் தலைவர்களைச் சந்தித்து பயங்கரவாதிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, பழங்குடியினர் பகுதிகளில் நேரடியாக நுழைந்து பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதை முற்றிலும் தவிர்க்குமாறு அமெரிக்க அதிகாரிகளை பழங்குடியினத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
"அமெரிக்கப் படைகளோ அல்லது அதன் ஆதரவுப் படைகளோ பழங்குடியினர் பகுதிகளில் புகுந்து நேரடியாகத் தாக்குதல் நடத்துவது மோசமான விளைவுகைள ஏற்படுத்திவிடும்.
முன்னாள் சோவியத் யூனியன் படைகள் ஆஃப்கானிஸ்தானில் நேரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியபோது, அந்நாட்டு மக்கள் ஒன்று திரண்டு படையினரை வெளியேற்றிய சம்பவம் இதற்குச் சாட்சியாகும்.
தீவிரவாதம், ஆயுதக் கலாச்சாரத்திற்கு எதிராக பழங்குடியினர் பகுதிகளில் எந்தவொரு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பும், பழங்குடியின மக்களின் நம்பிக்கையைப் பெறுவது அவசியமாகும்" என்று பழங்குடியினத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அதிகாரிகள், பழங்குடியினர் பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும் என்று தாங்கள் எப்போதும் விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.