இந்திய அரசு என்னை அழுத்தம் தந்து வெளியேற்றிவிட்டது : தஸ்லிமா!
வியாழன், 20 மார்ச் 2008 (13:47 IST)
இந்தியாவில் இருந்து நேற்று ரகசியமாக வெளியேறிய வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், 'இந்தியா அரசு மறைமுக அழுத்தம் தந்து என்னை வெளியேற்றி விட்டது' என்று கூறியுள்ளார்.
சொந்த நாட்டில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இந்தியாவில் தஞ்சம் அடைந்த தஸ்லிமாவுக்கு கொல்கத்தாவிலும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், 'எனது உடல்நலம் மோசமாக இருப்பதாலும், சாதாரண வாழ்க்கை வாழ விரும்பியும் இந்தியாவை விட்டு வெளியேறுகிறேன்' என்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ரகசிய இடத்தில் இருந்தபோது, தஸ்லிமா தெரிவித்திருந்தார்.
அதன்படி, டெல்லியில் இருந்து நேற்று லண்டன் சென்ற அவர், இந்திய பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,'லண்டனில் இருந்து ரகசிய இடத்துக்கு செல்ல உள்ளேன். பாதுகாப்பு கருதி அந்த இடத்தை தெரிவிக்க விரும்பவில்லை. இந்திய அரசு கட்டாயப்படுத்தி என்னை வெளியேற்றியதால்தான் நான் இங்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என்று தஸ்லிமா கூறினார்.
லண்டனில் இருந்து தஸ்லிமா எங்கு சென்றார் என்று உறுதியாக தெரியாத நிலையில், அவர் சுவீடன் சென்றிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 'தஸ்லிமா சுவீடன் நாட்டின் விசா பெற்றுள்ளார்' என்று அந்நாட்டு பத்திரிக்கை ஒன்று செய்து வெளியிட்டுள்ளது.