இந்திய மாணவர் கொலை வழக்கில் 2-வது குற்றவாளி சேர்ப்பு!
செவ்வாய், 18 மார்ச் 2008 (16:10 IST)
இந்திய மாணவர் அபிஜீத் மஹாடோ கொலை வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் இன்னொரு மாணவனை இரண்டாவது குற்றவாளியாக அறிவித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த அபிஜீத் மஹாடோ (29) அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள டுயூக் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் டாக்டர் பட்டத்திற்கான ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார். பல்கலைக்கழக வளாகத்திலேயே ஜனவரி 18ஆம் தேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலைக் குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் அமெரிக்க காவல்துறையினர் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், அமெரிக்க மாணவன் லாரன்ஸ் அல்வின் லோவேட்டே இந்திய மாணவர் மஹாடோவின் கொலையிலும் சம்பந்தம் இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மற்றொரு மாணவர் ஈவ் கார்சன் கொலை சம்பந்தமாக 17 வயதான லோவேட்டே கடந்த வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டான். ஜாமீனில் வெளிவர, முன்பு மறுக்கப்பட்ட நிலையில், தற்போது 3 அமெரிக்க மில்லியன் தொகை பிணையத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளான். மஹாடோ கொலை வழக்கில் 19 வயதான ஸ்டூபன் லவான்ஸ் ஓட்ஸ் கடந்த மாதம் சேர்க்கப்பட்ட நிலையில், லோவேட்டோ இரண்டாவது நபர். இவர்கள் இருவருமே பல்கலைக்கழக மாணவர்கள்.
லோவேட்டோவின் செல்போன், ஐ-பாட் ஆகியவை மாணவர் கார்சன் கொலை செய்யப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்டது. அதன்பிறகே, மஹாடோ கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.