தலாய் லாமாவுடன் பேசத் தயார்: சீனா!
செவ்வாய், 18 மார்ச் 2008 (17:48 IST)
திபெத் விவகாரம் தொடர்பாக புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுடன் பேசத் தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது.
இதுகுறித்து பெய்ஜிங்கில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீனப் பிரதமர் வென் ஜியாபோ, ''தலாய் லாமாவுடன் பேச்சு நடத்துவதற்கான கதவு எப்போதும் திறந்தே உள்ளது. ஆனால் திபெத் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை அவர் அங்கீகரிக்க வேண்டும்'' என்றார்.
திபெத் தலைநகர் லாசாவில் சீன அரசுக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கலவரத்தில் 13 பேர் பலியானது பற்றிக் கருத்துத் தெரிவித்த தலாய் லாமா, "சீனா 'கலாச்சார படுகொலை'யில் ஈடுபட்டு வருகிறது" என்றார்.
இதைத் திட்டவட்டமாக மறுத்த வென் ஜியாபோ, தலாய் லாமாவின் கூற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்றதுடன், "அமைதியான விடுதலை, ஜனநாயக மறுமலர்ச்சி ஆகியவற்றில் திபெத் பெருமளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது" என்றார்.
முன்னதாக, லாசா வன்முறைக்கு முன்னேற்பாடு செய்தது, மூளையாக செயல்பட்டது, தூண்டிவிட்டது எல்லாம் தலாய் லாமாதான் என்பதை நிரூபிப்பதற்கு "ஏராளமான ஆதாரங்கள்" இருப்பதாக வென் ஜியாபோ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.