திபெத்துக்குள் நுழைய அயல்நாட்டினருக்கு தடை: சீனா!
திங்கள், 17 மார்ச் 2008 (12:18 IST)
திபெத்தில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து அயல் நாட்டினர் அங்கு நுழைய சீனா அரசு தடை விதித்துள்ளது.
சீனாவின் பிடியில் உள்ள திபெத்தில் புத்த பிட்சுகளும், மக்களும் விடுதலைகோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் சீன பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 10 பேர் பலியானதாக சீன செய்தி நிறுவனம் சின்குவா தகவல் தெரிவித்துள்ளது.
இதனால், திபெத்துக்கு சுற்றுலா செல்ல அனுமதி கோரி அயல் நாட்டினர் அளித்துள்ள விண்ணப்பங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக அந்நாட்டு அரசு தற்காலிகமாக தடை செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திபெத் அரசின் உதவியுடன் 20க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு விவகாரத்துக்கான இயக்குனர் ஜு ஜியன்குவா தெரிவித்ததாக மேற்கோள் காட்டி சின்குவா செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
திபெத்துக்கு சுற்றுலா வந்த பயணிகள் தங்கள் நாட்டுக்கு திரும்ப செல்ல விருப்பம் தெரிவித்தால் அந்நாட்டின் விமானத்துறை, இரயில்வே, நெடுஞ்சாலை போக்குவரத்துதுறை ஆகியவை தயாராக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
கலவரம் நடந்த பகுதியில் இருந்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உள்பட 580 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக லாசா காவல் துறையினர் தெரிவித்தனர்.
மேலும், அங்கு சீன பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், வெள்ளியன்று நடைபெற்ற கலவரத்தைத் தொடர்ந்து நேற்று புதிதாக எந்தவித கலவரமும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கலவரக்காரர்கள் தாங்களாகவே வந்து சரணடைய இன்று வரை திபெத் அரசு கெடு விதித்துள்ளது. அவ்வாறு சரணடையாவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.