சரப்ஜித் சிங்கிற்கு ஏப்ரல் 1‌ல் தூக்கு?

திங்கள், 17 மார்ச் 2008 (11:18 IST)
1990 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட 4 குண்டுவெடிப்பு தா‌க்குத‌ல் தொடர்பாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங்கை ஏப்ரல் 1ஆம் தேதி லாகூர் சிறையில் தூக்கிலிடப் போவதாக பத்திரிக்கை செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இதுவரை இல்லை.

லாகூர், கோட் லக்பட் சிறையில் கடந்த 17 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சரப்ஜித் சிங்கிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்படவேண்டிய தேதி குறித்த ஆணையை அதிகாரிகள் நேற்று பெற்றிருப்பதாக உருது மொழி நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் மான்ஜித் சிங் என்று அழைக்கப்படும் சரப்ஜி‌த் சிங்கின் கருணை மனுவை அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மார்ச் 3ஆம் தேதி நிராகரித்தார்.

லாகூர் மற்றும் முல்தான் நகரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டார் சரப்ஜித் சிங். பாகிஸ்தான் கூறுவது போல் இவர் உளவாளி இல்லை என்றும், இவர் பாகிஸ்தான் பகுதிக்குள் வந்திருப்பது ஒரு விபத்தே என்றும் சரப்ஜித் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

தற்போது கருணை மனுவை அதிபர் முஷாரஃப் நிராகரித்துள்ள நிலையில் மரண தண்டனை வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி நிறைவேற்றுமாறு ஆணை வந்துள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்