மூடு பனியால் அபுதாபியில் 200 கார்கள் மோதல்: 2 இந்தியர்கள் பலி?
வியாழன், 13 மார்ச் 2008 (15:04 IST)
கடும் மூடு பனியால் அபுதாபி-துபாய் நெடுஞ்சாலையில் 200 கார்கள் மோதிக்கொண்டதில், 31 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர். இரண்டு இந்தியர்கள் இறந்துள்ளதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தில் 6 முதல் 8 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று முந்தைய தகவல்கள் தெரிவித்த நிலையில், நேற்று இரவு மூன்று பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மிக மோசமான பனி மூட்டத்தால் 11ஆம் தேதி இரவு அபுதாபி-துபாய் எல்லைப்பகுதியான கன்டூட்டில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 25 கார்கள் தீப்பற்றி எரிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எந்த இந்தியரும் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. என்றபோதிலும், இரண்டு இந்தியர்கள் இறந்துள்ளதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிப்பதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அபுதாபிக்கான இந்திய தூதரக செயலர் ஸ்ரீநிவாஸ் பாபு கூறுகையில், 'படுகாயமடைந்த இந்தியர்கள் அபுதாபியின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஃப்ராக் மருத்துவமனையில் 22 பேரும், ரஹ்பா மருத்துவமனையில் 6 பேரும், கலிஃபா மருத்துவமனையில் 2 பேரும், துபாயில் உள்ள ரஷித் மருத்துவமனையில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவவும், அவர்கள் குறித்த தகவல்களை அறியவும் உள்நாட்டு அதிகாரிகளிடம் இந்திய தூதரகம் இடைவிடாத தொடர்பு வைத்துள்ளது' என்றார்.
'ஒவ்வொருவரும் வேகமாக காரை ஓட்டிவந்துள்ளதால், முதல் விபத்து நடந்தவுடன் அனைத்து கார்களும் வரிசையாக மோதிக்கொண்டுள்ளன' என்று அபுதாபி போக்குவரத்து காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.