பாகிஸ்தான் வன்முறைகள்: அமெரிக்கா கவலை!
செவ்வாய், 4 மார்ச் 2008 (13:25 IST)
பாகிஸ்தானில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்துக் கவலை தெரிவித்துள்ள அமெரிக்க அரசு, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானிற்கு உதவத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளது.
மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் மட்டும்தான் உதவி செய்ய முடியுமே தவிர, பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தி உள்ளது.
இது குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் மாளிகை இணைப் பேச்சாளர் டாம் கேசே, தலிபான், அல் காய்டா உள்ளிட்ட பயங்கரவாதிகள் நாள்தோறும் நடத்திவரும் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கில் பலியாவது குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரைப் பாகிஸ்தான் தீவிரப்படுத்துமானால் அதற்கு எல்லா வகையிலும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளதாவும் அவர் கூறினார்.
பாகிஸ்தானில் புதிய அரசு அமைவது குறித்து அந்நாட்டு அரசியல் கட்சிகளிடையே தொடர்ந்து நடந்துவரும் பேச்சுகளை அமெரிக்கா கவனித்து வருகிறது என்று கூறிய கேசே, பாகிஸ்தான் அரசியல் விவகாரங்களை அந்நாட்டுத் தலைவர்கள்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.