பதவி விலகும் எண்ணம் எதுவும் இல்லை: முஷாரஃப்
புதன், 20 பிப்ரவரி 2008 (12:50 IST)
பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிபர் முஷாரஃப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (கான்) கட்சியின் வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்தது. இதனால் ''அதிபர் பதவியிலிருந்து விலகும் எண்ணம் எதுவும் இல்லை'' என்று அதிபர் முஷாரஃப் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிபர் முஷாரஃப் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (கான்) கட்சியின் வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்தனர். இதையடுத்து, அதிபர் பதவியில் இருந்து முஷாரஃப் விலக வேண்டும் என்று அங்குள்ள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் தனியார் பத்திரிக்கைக்கு அதிபர் முஷாரஃப் அளித்துள்ள பேட்டியில், அதிபர் பதவியில் இருந்து விலகுவதோ அல்லது ஓய்வு பெறுவதோ குறித்த எண்ணம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அதிபர் பதவியில் நீடித்து நாட்டில் ஜனநாயகம் மறுமலர்ச்சி பெற வழி காட்ட இருப்பதாக கூறிய அவர், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் கூறினார்.
மேலும், தேர்தல் நடைபெற்றதிலிருந்து, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) தலைவர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆசிப் அலி ஜர்தாரியையோ தான் சந்திக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தான் அரசியல் கட்சித் தலைவர் இல்லை என்றும் வெற்றி பெற்ற மற்ற கட்யின் தலைவர்கள் கூட்டணி அரசு அமைக்க பேச்சு வார்த்தை நடத்த ஒருவரை ஒருவர் சந்திக்க இருப்பதாகவும் அதிபர் முஷாரஃப் கூறியுள்ளார்.