இலங்கையில் கடும் மோதல் : 15 படையினர் பலி!
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (20:50 IST)
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்க படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 15 படையினர் கொல்லப்பட்டதுடன், 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இலங்கையில் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது சிறிலங்க ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்குப் புலிகளும் கடுமையாகப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மன்னாரில் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் மாலை வரை நீடித்த மோதல்களில் 15 படையினர் கொல்லப்பட்டதுடன், 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தங்கள் தரப்பு இழப்புகள் குறித்து அவர்கள் விரிவாக எதையும் தெரிவிக்கவில்லை.
வடக்கு மோதல்களில் 25 புலிகள் பலி!
இதற்கிடையில், இலங்கையின் வடக்குப் பகுதிகளில் நடந்த மோதல்களில் 25 புலிகளும் 2 படையினரும் கொல்லப்பட்டதாகவும், அந்த உடல்கள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் சிறிலங்க அரசின் தேசியப் பாதுகாப்புத் தகவல் மையம் தெரிவித்தது.
இதுதவிர வடகிழக்கில் உலியன்குளம் பகுதியில் நடந்த மோதலில் 10 புலிகளும், 2 படையினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.