பாகிஸ்தான் : பெனாசிர், நவாஸ் ஷெரீஃப் கட்சிகள் பெரும்பான்மை இடங்களில் வெற்றி!

செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (15:37 IST)
பாகிஸ்தானின் தேச சட்டப் பேரவைக்கு நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், அதிபர் முஷாரஃபை கடுமையாக எதிர்த்து வரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கும் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளன!

பாகிஸ்தான் தேச சட்டப் பேரவைக்கு மொத்தமுள்ள 272 தொகுதிகளில் 269 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பிற்பகல் 2 மணி வரை முடிவுகள் வெளியான 238 தொகுதிகளில் பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 84 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதிபர் முஷாரஃப் மேற்கொண்ட ராணுவப் புரட்சியின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதிபர் முஷாரஃப் ஆதரவு பெற்று ஆளுங்கட்சியாக இருந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (குலாமி) 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களில் பலரும் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர்.

முட்டாஹிடா குவாமி மூமெண்ட் 19 இடங்களிலும், அவாமி தேசிய கட்சி 10 இடங்களிலும், சுயேட்சைகள் 21 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் தேச சட்டப் பேரவையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும் 147 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், இவைகள் இரண்டும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி, சுயேட்சைகள் மற்ற இரண்டு கட்சிகளின் துணை கொண்டு முஷா·பிற்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரும் பலத்தையும் பெற்றுள்ளன.

இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு 40 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தபோதிலும், வாக்காளர்கள் தங்கள் முடிவுகளை தெளிவாகத் தெரிவித்துள்ளது தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டுள்ளது.

மதவாத அடிப்படைக் கொள்கைகளைக் கொண்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (குலாமி) கட்சியும், அதன் கூட்டணிக் கட்சியான முட்டாஹிடா மஜ்லிஸ்-ஈ-அமால் கட்சியும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது மட்டுமின்றி, கட்சிகள் சார்பாக நடத்தப்பட்ட மதவாதிகள் பலர் தோல்வியைத் தழுவியுள்ளனர். இக்கூட்டணியின் தலைவர் மெளலான பஸ்லூர் ரஹ்மான் தோற்கடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்