பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் 269 இடங்களுக்கும், 4 மாகாணச் சட்டப் பேரவைகளுக்கான 570 இடங்களுக்கும் தற்பொழுது வாக்குப் பதிவு நடக்கிறது. இதற்காக நாடு முழுவதும் 64,176 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 5,20,000 ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் அதிபர் முஷாரஃப்பை ஆதரிக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (குலாதி இ ஆசம்), பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, முத்தாதா குவாமி இயக்கம், நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), ஜமாயித் கட்சி, அவாமி தேசிய கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் உள்பட சில தேசிய கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன. தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு விட்டதால் அவரும் போட்டியிடவில்லை. நாட்டு மக்களில் 8 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்குப் பதிவு செய்யத் தகுதி உள்ளவர்கள் ஆவர்.
வாக்குப் பதிவை அமைதியாக நடத்தி முடிக்கும் பொருட்டு, துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் 81 ஆயிரம் பேர் உள்பட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரும், காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேட்பாளர் சுட்டுக் கொலை!
இதற்கிடையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் வாக்குப் பதிவு துவங்குவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு 20 இடங்களில் குண்டுகள் வெடித்தன. நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் செளத்ரி ஆஷிப் அஸ்ராஃப் என்பவரைத் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். லாகூரில் வாக்காளர்கள் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
எதிர்க் கட்சிகள் போராட்ட எச்சரிக்கை!
பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று எதிர்க் கட்சிகள் அறிவித்துள்ளன. பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) ஆகியவை வெற்றி பெற்றால் அதிபர் முஷாரஃப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.