ஆஸ்ட்ரேலியாவில் கடந்த கால அரசுகளின் போது பழங்குடியின மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்காக தற்போதைய பிரதமர் கெவின் ரூட் மன்னிப்புக் கேட்டார்.
ஆஸ்ட்ரேலிய கண்டத்தில் இருந்த சுமார் 10 லட்சம் பழங்குடியினர், வெள்ளையர்கள் வந்து குடியேறியபோது வெளியேற்றப்பட்டனர். 1910 முதல் 1970 வரை பழங்குடியினரின் குழந்தைகள் சுமார் 1 லட்சம் பேரைப் பெற்றோரிடம் இருந்து பிரித்து வேறு இடங்களுக்கு அரசே அழைத்துச் சென்றது. பழங்குடியினர் இனம் அழிந்து வருவதாகக் கூறி அவர்களது பிள்ளைகளை பிரிக்க சட்டமும் இயற்றப்பட்டது.
இவ்வாறு, பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டவர்கள், திருடப்பட்ட வர்க்கம் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் மிகவும் வறிய நிலையில் ஆஸ்ட்ரேலியாவின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்களும் அவர்களது பெற்றோரும் அடைந்த வேதனையின் வடு இன்னும் மறையாமல் உள்ளது.
இந்நிலையில், அரசுகள் மாறியபோது நிம்மதியடைந்த பழங்குடியினர், தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தங்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக கோரி வந்தனர். ஆனால் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ஹோவர்ட் தலைமையிலான பழமைவாத கட்சி இக்கோரிக்கையை ஏற்கவில்லை.
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தொழிலாளர் கட்சியை சேர்ந்த பிரதமர் கெவின் ரூட், புதன்கிழமை நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் ஆஸ்ட்ரேலிய பழங்குடியின மக்களுக்கு வெள்ளையர் அரசு இழைத்த கொடுமைக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றத்தில் அவர் பேசியது தொலைக்காட்சியில் நேரடியாக நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.
"பழங்குடியினரும் ஆஸ்ட்ரேலியர்கள்தான். இதற்கு முன்பு இருந்த அரசுகள் இயற்றிய சட்டங்களாலும், பின்பற்றிய கொள்கைகளாலும் அவர்கள் பெருமளவில் வேதனை அனுபவித்துள்ளனர். ஆஸ்ட்ரேலியாவின் இதயத்தில் ஏற்பட்ட பெரிய கறையை நீக்க, மன்னிப்பு கோருகிறேன். வறுமையில் வாழும் பழங்குடியினர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பாடுபடுவேன்" என்றார் பிரதமர். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராடிய பழங்குடியின உறுப்பினர்களை அவர் பாராட்டினார்.