சிறுநீரக திருட்டு கும்பல் தலைவன் அமித் குமார் இந்தியாவிடம் ஒப்படைப்பு!
சனி, 9 பிப்ரவரி 2008 (18:00 IST)
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட சிறுநீரக திருட்டு கும்பலின் தலைவன் மருத்துவர் அமித் குமார் மத்திய புலனாய்வுக் கழகத்திடம் இன்று ஒப்படைக்கப்பட்டான்.
இந்திய-நேபாள எல்லையில் தலைமறைவாக இருந்த சிறுநீரக திருட்டு கும்பலின் தலைவன் அமித் குமாரை நேற்று முன்தினம் நேபாளக் காவல் துறையினர் கைது செய்தனர். இவனை இந்தியா கொண்டுவர மத்திய புலனாய்வுக் கழகம் தீவிரமாக முயற்சித்த நிலையில், அமித்குமார் மீது நேபாளக் காவல் துறை மூன்று வழக்குகளைப் பதிவு செய்தது.
அமித் குமாரிடம் இருந்து 18,900 அமெரிக்க டாலர், 1.45 லட்சம் யூரோ, 9.36 லட்சம் இந்திய ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை வைத்திருந்ததற்காக அமித் குமார் மீது தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நேபாளக் காவல் துறை தெரிவித்தது.
சர்வதேசக் காவல் துறை (இன்டர்போல்) விடுத்த சிவப்பு அறிக்கை மீதும், சட்ட விரோதமாக மனித உறுப்பை மாற்றியதற்காக மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதற்காக 9 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்று நேபாளக் காவல் துறை கூறியது.
இந்நிலையில், இன்டர்போலின் விதிமுறைப்படி மருத்துவர் அமித் குமாரை இந்தியாவின் மத்திய புலனாய்வுக் கழகத்திடம் காத்மாண்டு காவல்துறை இன்று மாலை ஒப்படைத்தது. அமித் குமாருடன் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுள்ள ம.பு.க. அதிகாரிகள், இன்று மாலை 6.00 மணிக்கு டெல்லி வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.