முஸ்லிம்களின் ஆதரவை இழக்கிறது அல் கய்டா: அமெரிக்க உளவுத் துறை!
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (13:37 IST)
கொடிய வன்முறைகளை அரங்கேற்றுவதாலும், குறிப்பாக முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களாலும் இஸ்லாமிய உலகத்தின் ஆதரவை அல் கய்டா இயக்கம் இழந்து வருவதாக அமெரிக்க உளவு நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க தேசிய உளவு நிறுவனத்தின் இயக்குநர் அட்மிரல் மைக் மெக்கோனெல் கூறுகையில், "அல் கய்டா இயக்கத்தின் கொடூரத் தாக்குதல்களாலும், அதைச் சார்ந்த அமைப்புகள் நடத்திவரும் முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களாலும், இஸ்லாமிய உலகத்தில் தனக்குள்ள ஆதரவை அல் கய்டா இழந்து வருகிறது.
இவ்வியக்கத்தின் மத பயங்கரவாதச் செயல்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அல் கய்டாவின் அழிவு துவங்கிவிட்டது. அது எப்போது என்று தற்போது உறுதியாகக் கூற முடியாது" என்றார்.
மேலும், "அல் கய்டா இயக்கத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளில் சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மற்ற மத அடிப்படைவாதிகளும் அவ்வியக்கத்தின் செயல்களை விமர்சிக்கத் துவங்கியுள்ளனர். அல் கய்டா இயக்கத்தின் வளர்ச்சி தடைபட்டுள்ளதைத் தான் இது காட்டுகிறது.
கடந்த 18 மாதங்களில் தங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதிலும், தங்களை நிலைநிறுத்திக் கொள்வதிலும் அல் கய்டா இயக்கத்தினர் பிரச்சனைகளைச் சந்தித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில், அல் கய்டா இயக்கத்தின் நூற்றுக்கணக்கான தலைவர்களும், ஆதரவாளர்களும், நன்கொடையாளர்களும் மனம் மாறியுள்ளனர். அல் கய்டாவின் கொள்கைகளுக்கும் இஸ்லாமிய உலகத்தின் எதிர்பார்ப்பிற்குமான இடைவெளி அதிகரித்து வருவதன் பாதிப்பாக இது இருக்கலாம்.
இருந்தாலும், அல் கய்டாவினால் அமெரிக்காவிற்கு உள்ள அச்சுறுத்தல் நீங்கவில்லை. பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆஃப்கானிஸ்தான் மலைப் பகுதிகளில் பயிற்சி பெற்றுவரும் பயங்கரவாதிகள் அமெரிக்காவைத் தாக்கத் திட்டமிட்டுள்ளனர் " என்றார் மைக் மெக்கோனெல்.