லாகூரில் நகரில் வசிக்கும் இந்துக்களுக்கு மயானம் அமைக்க பாகிஸ்தான் அரசு இடம் ஒதுக்கியுள்ளது.
இந்துக்கள் அதிகளவில் வாழும் சியல்கோட், நரோவல், சர்கோதா, ரஹிம் யர் கான், பகவல்புர், நன்கானா ஆகிய பகுதிகளில் கடந்த 1947ஆம் ஆண்டு முதல் பிரத்யேக மயானம் அமைக்கப்பட்டுள்ளது.
லாகூரில் வாழும் இந்துக்களுக்கும் மயானம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, பகர்மான்டி பகுதியில் உள்ள பாபு சாபுவில் 4.24 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
"நகரப்பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான இந்துக்களுக்கு தற்போது, ரவி ஆற்றோரத்தில் உள்ள சிறிய இடம் தான் பயன்படுத்தப்படுகிறது" என்று லாகூரில் உள்ள கிருஷ்ணா கோயில் அர்ச்சகர் பாகத் லால் கோகர் கூறினார்.
சமய நல்லுறவு குழு தலைவர் ஜாக்யூலின் டிரேஸ்லெர் கூறுகையில், "முன்பு குறைவான இந்துக்களே லாகூரில் வாழ்ந்தனர். அதனால் தங்களுக்கு தனி மயானம் அமைக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. ஆனால், கடந்த பத்து ஆண்டிகளில் அதிகமான இந்துக்கள் இப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதால், தற்போது பிரத்யேக மயானம் தேவைப்படுகிறது" என்றார்.
கிருஷ்ணா கோயிலை புதுப்பிப்பதற்கும், கங்கா ராம் சமாதியை விரிவாக்கம் செய்வதற்கும் அந்நாட்டு அரசு ரூ.5 மில்லியன் வழங்கியுள்ளது.
இதுதவிர, 2 ஆயிரம் புனிதயாத்திரை இந்துக்கள் தங்குவதற்கு வசதியாக அந்நாட்டு அரசு ஆஸ்ரமமும் கட்டி வருகிறது.