இந்து கோயில் இடிப்புக்கு மலேசிய துணை பிரதமர் மன்னிப்பு!
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:18 IST)
மலேசியாவில் இந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு அந்நாட்டு துணை பிரதமர் நசாப் துன் ரசாக் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மலேசியாவில் உள்ள இந்து கோயிலை அந்நாட்டு அரசு கடந்த நவம்பரில் இடித்தது. இந்த சம்பவம் மலேசியாவாழ் இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் எதிர்ப்பை அம்மாத இறுதியில் நடந்த பிரமாண்ட பேரணியில் போதும் வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், "தீபாவளிக்கு ஒருவாரத்திற்கு முன்பு கோயில் இடிக்கப்பட்டிருக்கக்கூடாது. அதிகாரிகள் இந்த நடவடிக்கையை ஓரிரு மாதத்திற்கு தள்ளிப் போட்டிருந்திருக்கலாம்" என்று மலேசிய துணை பிரதமர் நசாப் துன் ரசாக் கூறியதாக அந்நாட்டு பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறியதாக மலேசியாவில் வெளியாகும் மூன்று தமிழ் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளன. பிரத்யேக இடத்தில் கோயில் மீண்டும் கட்டப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் மலேசிய குடிமை பணிகளில் இந்தியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், இந்திய வம்சாவழியினருக்கு பல்கலைக்கழக உதவித்தொகையும், வியாபார நிதி உதவியும் அளிக்கப்படும் என்றும் துணை பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
மலேசியாவில் நடக்க உள்ள பொது தேர்தலில் இந்திய வம்சாவழியினர் ஆளும் பாரிசன் நேஷனல் கட்சி கூட்டணிக்கு ஆதரவளிக்காமல் போகலாம். மலேசியாவில் மொத்தம் இரண்டு மில்லியன் இந்திய வம்சாவழியினர் இருப்பதால் அக்கட்சி கூட்டணி சில நாடாளுமன்ற தொகுதிகளை இழக்க நேரிடலாம் என்பதாலேயே துணை பிரதமர் இவ்வாறு கூறியுள்ளதாக கருதப்படுகிறது.