ருவாண்டா, காங்கோவில் கடும் நிலநடுக்கம்: 39 பேர் பலி!
திங்கள், 4 பிப்ரவரி 2008 (17:43 IST)
ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, காங்கோவில் அடுத்தடுத்து ஏற்பட்ட கடும் நிலநடுக்கங்களில் 39 பேர் பலியானதுடன், 380 பேர் படுகாயமடைந்தனர்.
காங்கோவில் நேற்று மாலை 6.0 ரிக்டர் அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்துச் சிறிது நேரத்தில் காங்கோ நாட்டு எல்லையில் ருவாண்டா நாட்டின் ருசிஷி மாவட்டத்தில் 5.0 ரிக்டர் அளவிற்கு அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களில் மொத்தம் 39 பேர் பலியானதுடன், 380 பேர் படுகாயமடைந்தனர்.
ருவாண்டாவில் தேவாலயம் ஒன்று இடிந்தது. அதில் , பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 34 பேர், தேவாலயத்தின் இடிபாடுகளில் சிக்கிப் பலியாகினர். 100 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
காங்கோவின் பக்காவு நகரத்தில் 5 பேர் பலியானதுடன், 149 பேர் படுகாயமடைந்தனர். பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள் கடுமையாகச் சேதமடைந்தன.