சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலர் கோத்தபாய ராஜபக்ச, ராணுவத் தளபதி சரத் பொன்கோ தலைமையிலான உயரதிகாரிகள் குழுவினர், விமானப்படை விமானம் ஒன்றில் தலைநகர் கொழும்பில் இருந்து புறப்பட்டு நேற்று காலை 9.15 மணிக்கு பலாலி வந்தனர். அங்கு தரையிரங்குவதற்காக விமானம் தாழ்வாகப் பறந்த நேரத்தில், விடுதலைப் புலிகள் எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் திடீர் தாக்குதலால், பலாலி கூட்டுப்படைத்தளத்தில் தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டு மீண்டும் மேலழுந்த வானூர்தி உடனடியாகவே அங்கிருந்து கொழும்பு திரும்பியது. இதனால் கோத்தபாய உட்பட உயரதிகாரிகள் உயிர் தப்பினர்.
விடுதலைப் புலிகளின் ஆர்ட்டிலெறி எறிகணைகள், பலாலி கூட்டுப்படைத் தளத்தின் முக்கியப் பகுதிகளில் விழுந்துள்ளன. விமான ஓடுதளத்தில் 20 எறிகணைகள் வரை விழுந்ததாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.
இதையடுத்து ராணுவத்தினரும் கடுமையான தாக்குதலை நடத்தினர். யாழ்ப்பாணத்தில் உள்ள தளங்களிலிருந்து பூநகரி நோக்கி முற்பகல் 9.30 மணியளவில் துவங்கிய இத்தாக்குதல்கள் சுமார் 3 மணிநேரம் நீடித்தன.
பின்னர், முற்பகல் 11.15 மணியளவில் யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலம்வந்த சிறிலங்க விமானப் படை விமானங்கள் பூநகரி கல்முனைப் பகுதியில் தாக்குதலை மேற்கொண்டன.
இத்தாக்குதல்கள் இரவு வரை நீடித்ததாகவும், சோதனை என்ற பெயரில் ராணுவத்தினர் கடுமையான கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.