பிரிட்டன் பள்ளிகளில் மெட்டல் டிடெக்டர்...
செவ்வாய், 22 ஜனவரி 2008 (10:49 IST)
பொதுவாக விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பிற்காக மெட்டல் டிடெக்டர் பொருத்துவது வாடிக்கை. ஆனால், மாணவர்களுக்கு படிப்போடு வாழ்வைச் சொல்லித் தர வேண்டிய பள்ளிகளில் மெட்டல் டிடெக்டர் பொருத்த வேண்டிய கொடுமை பிரிட்டனுக்கு நேர்ந்துள்ளது.
லண்டன், லிவர்பூல், மான்செஸ்டர், பிர்மிங்காம் நகரங்களில் உள்ள சில பள்ளிகளில் மாணவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் ஆசிரியர்களுக்கே மிரட்சி தருகிறது.
கத்திகள், துப்பாக்கிகள், விதவிதமான இரும்பு ஆயுதங்கள் என மாணவர்களின் பைகளில் இருக்கவே கூடாத பொருட்களை வெளியேற்ற எடுக்கப்பட்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
இதனால், வேறு வழியின்றி பள்ளி நிர்வாகத்தினர் காவல் துறையை நாட, தற்போது அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
முதல்கட்டமாக, மேற்குறிப்பிட்ட நகரங்களில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் மெட்டல் டிடெக்டர் பொறுத்தப்படும் என்று உள்துறை செயலர் ஜேக்கி ஸ்மித் தெரிவித்தார்.
பள்ளிகளிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் ஆயுதங்கள் முற்றிலும் தடை செய்யப்படுவதோடு, மீறுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று ஸ்மித் கூறினார்.
கடந்த 3 ஆண்டுகளில் பள்ளி மாணவர்கள் தொடர்புடைய குற்றங்கள் 3 மடங்கு பெருகிவிட்டதாக பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலர் ஜான் டன்ஃபோர்ட் கவலை தெரிவித்தார்.
குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் கைகளில் ஆயுதப் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.