'தாலிபான்களுக்கு முடிவுகட்ட இணைந்து செயல்படுவோம்': பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அழைப்பு!
வியாழன், 17 ஜனவரி 2008 (17:50 IST)
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆதிவாசிகள் அதிகளவில் வாழும் வஜிரிஸ்தான் (ஃபாட்டா) பகுதியில் தாலிபான்கள், அல்-கய்டா நடத்தும் தாக்குதலுக்கு முடிவுகட்ட ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கியிருக்கும் தாலிபான்கள், பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது அடிக்கடி தாக்குதல் நடந்தி வருகின்றனர். இந்நிலையில், வடக்கு மற்றும் தெற்கு வஜிரிஸ்தானில் தாலிபான்கள், அல்-கய்டாவினரால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை போக்க இணைந்து செயல்படலாம் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க செய்தி தொடர்பாளர் மெக்கோர்மக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானின் எதிர்காலத்திற்கும் இது ஒரு முக்கிய பிரச்சனை என்பதை நாங்கள் அறிவோம். 'பயங்கரவாதிகளை அழித்து வஜிரிஸ்தானை பாகிஸ்தானுடன் இணைக்கப்படும்' என்று அதிபர் முஷராப் கடந்த ஆண்டில் கூறிவந்தார்.
அதற்கான திட்டத்திலும், செயல்பாட்டிலும் இரண்டாவது பார்வை தேவைப்படுவதாக எண்ணுகிறோம். இப்பிரச்சனையில் ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை. குறிக்கோளை அடைவதற்கான திட்டத்தை அவர்கள் (பாகிஸ்தான்) மெருகேற்றி வருகிறார்கள். அதில் நாங்களும் இணைந்து செயல்பட விரும்புகிறோம். எனினும், அப்பகுதியில் நடக்கும் சம்பவங்களை மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.