நேபாளத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கின!
திங்கள், 14 ஜனவரி 2008 (18:26 IST)
சுமார் 240 ஆண்டுகளாக மன்னராட்சி நடந்துவரும் நேபாளத்தில், ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி மக்களாட்சியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
நேபாள நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு நாடாளுமன்றம் கூடி நேபாளத்திற்கான புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை இறுதி செய்யும். முன்னதாக அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
தேர்தல் நடவடிக்கைகளில், முதல்கட்டமாக அரசியல் கட்சிகள் தங்களைப் பதிவு செய்துகொள்ளும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் ஜனவரி 29 ஆம் தேதி முடிவுறும்.
முறையான தேர்தலை நடத்துவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் பிப்ரவரி 11 இல் முடிவுறும். தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியலை பிப்ரவரி 20 க்கு முன்னதாக ஒப்படைக்க வேண்டும்.
தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் பிப்ரவரி 20 ஆம் தேதி திறக்கப்படும். அன்றே தலைமைத் தேர்தல் அதிகாரி முறைப்படி பதவியேற்பார்.
அதேபோல, பிப்ரவரி 22 இல் திட்டமிட்டு இறுதி செய்யப்பட்ட தேர்தல் நடவடிக்கை விவரங்களை தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிடுவார். அதையடுத்து வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 25 இல் தொடங்கி அன்றே முடிவுறும். மார்ச் 2 ஆம் தேதி கட்சிகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும்.
இதற்கிடையில், கடந்த 16 ஆம் தேதி நேபாள அரசினால் அறிவிக்கப்பட்ட தேர்தல் ஒழுங்கு விதிகள், அரசியல் கட்சிகளுக்கு பிப்ரவரி 20 முதலும், வேட்பாளர்களுக்கு பிப்ரவரி 25 முதலும், தனியார் ஊடகங்களுக்கு மார்ச் 2 முதலும் அமலுக்கு வரும்.
நேபாளத்தில் தேர்தல் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய சர்வதேசப் பார்வையாளர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
தேசிய அளவிலும் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பருவநிலையைக் கருத்தில் கொண்டு இப்போதே தேர்தல் பொருட்களை உரிய இடங்களுக்குக் கொண்டுசேர்க்கும் நடவடிக்கைகள் இப்போதே தொடங்கிவிட்டன.