பெனாசிர் கொலை விசாரணையில் சர்வதேச உதவியை நாடுகிறது பாகிஸ்தான்!
Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2007 (14:43 IST)
பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில், சர்வதேச நாடுகளின் உதவியை பாகிஸ்தான் அதிகாரிகள் நாடியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் அரசு, பெனாசிர் கொலையை விசாரிக்க அயல்நாட்டு அரசுகளின் உதவியை நாடியுள்ளதா அல்லது தனது சொந்த அதிகாரிகளைக் கொண்டு விசாரணையை நடத்துவதற்கு அயல்நாட்டு அரசுகளின் ஆலோசனையைக் கோரியுள்ளதா என்ற விவரம் முழுமையாகத் தெரியவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி 'டான்' நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில், "விசாரணையை எப்படி சிறப்பாக நடத்த முடியும் என்று அயல்நாட்டு அரசுகளுடன் பாகிஸ்தான் அரசு விவாதித்து வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) போன்ற கட்சிகளின் தலைவர்கள், பெனாசிர் படுகொலையை அயல்நாட்டு அதிகாரிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் விடுத்துள்ள அறிக்கையில், பெனாசிர் மரணம் தொடர்பான விசாரணையில் அயல்நாட்டு தலையீடு எதுவும் இருக்காது என்று கூறியுள்ளார்.