பெனாசிர் புட்டோ சுட்டுக் கொலை: உலக நாடுகள் கண்டனம்!
Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2007 (21:07 IST)
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ ராவல்பிண்டியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு காரில் புறப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் இன்று மாலை 5 மணியளவில் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகில் உள்ள ராவல்பிண்டியில் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான பெனாசிர் புட்டோ கலந்துகொண்டு பேசினார். அவர் தனது உரையை முடித்துவிட்டு இறங்கி வந்து தனது காரில் ஏறும் சமயத்தில், கூட்டத்தில் கலந்திருந்த தற்கொலைப் படை பயங்கரவாதி தன்னிடமிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்.
இத்தாக்குதலில் காயமுற்ற பெனாசிரை அவரின் பாதுகாவலர்கள் தாங்கிப்பிடித்து காரில் ஏற்றிய நேரத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த 4 மர்ம மனிதர்கள் பெனாசிரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
மொத்தம் 5 குண்டுகள் சுடப்பட்டதாகவும், அதில் ஒரு குண்டு பெனாசிரின் கழுத்திலும், மற்றொரு குண்டு மார்பிலும் பாய்ந்ததாக அவரின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி ரகுமான் மாலிக் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தற்கொலைத் தாக்குதலில் 25 க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். 30 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து பெனாசிர் புட்டோ உடனடியாக ராவல்பிண்டி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும், சிகிச்சை பயனின்றி பெனாசிர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் நேரப்படி 6.16 மணிக்கும், இந்திய நேரப்படி 6.46 மணிக்கும் பெனாசிரின் உயிர் பிரிந்ததாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள் தெரிவித்தனர்.
நவாஸ் ஷெரீஃப் அதிர்ச்சி!
பெனாசிர் புட்டோ கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும், அந்நாட்டின் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கடும் அதிர்ச்சி தெரிவித்தார். ஏனெனில், சிறிது நேரத்திற்கு முன்பு அவர் நடத்திய ஊர்வலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
ராவல்பிண்டி பொது மருத்துவமனைக்கு விரைந்து வந்த நவாஸ் ஷெரீஃப், "என்ன நடந்தது என்பதை அதிபர் முஷாரஃப் தான் சொல்ல வேண்டும். எனக்கும் மிரட்டல்கள் வந்துள்ளன. நான் கடும் அதிர்ச்சியில் உள்ளேன்" என்றார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இக்கூட்டத்தில், உளவுத்துறை எச்சரிக்கை, பெனாசிர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
உலக நாடுகள் கண்டனம்!
பெனாசிர் புட்டோ கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பெனாசிர் மரணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியா கடும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
"பெனாசிர் மரணம் இந்தியாவிற்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் அளித்துள்ளது. அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார் அவர்.
பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைவர்களும் தங்களின் அதிர்ச்சியையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.
இரண்டு முறை பிரதமர்!
பெனாசிர் புட்டோ 1953 ஆம் ஆண்டு ஜீன் 21 ஆம் தேதி பாகிஸ்தானில் பிறந்தார். அவரின் தந்தை ஜூல்ஃபிகார் அலி புட்டோவின் மறைவுக்குப் பிறகு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
இதையடுத்து கடந்த 1988 ஆம் ஆண்டு முதல்முறையாகப் பாகிஸ்தானின் பிரதமரானார். 1990 ஆம் ஆண்டு அவரின் மீது ஊழல் குற்றச்சாற்று சுமத்தப்பட்டதால் பதவி விலகினார். அப்போது அவரின் கணவர் ஆஷிப் அலி ஜர்தாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் 1993 ஆம் ஆண்டு பெனாசிர் மீண்டும் பாகிஸ்தானின் பிரதமரானார். ஆனால் 1996 ஆம் ஆண்டு அவரின் மீது மீண்டும் ஊழல் குற்றச்சாற்று சுமத்தப்பட்டது. இம்முறை தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக அயல்நாட்டிற்குச் சென்றார்.
இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு, பாகிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநாட்டியே தீருவேன் என்று கூறி மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புடன் கூட்டணி அமைத்தார்.
இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி பாகிஸ்தான் திரும்பினார்.
பாகிஸ்தானின் பெனாசிர் புட்டோ நாடு திரும்பியதற்கு சில தீவிரவாத இயக்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. தேர்தலில் அவர் போட்டியிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் அவை எச்சரிக்கை விடுத்தன.
இந்நிலையில் அவர் நாடு திரும்பிய நாளன்றே அவரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பெனாசிர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இருந்தாலும் பாகிஸ்தான் மக்களுக்காக எதையும் சந்திக்கத் தயார் என்று பெனாசிர் தொடர்ந்து கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.