பாக். முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ சுட்டுக் கொல்லப்பட்டார்!

வியாழன், 27 டிசம்பர் 2007 (21:03 IST)
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ, ராவல்பிண்டி பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு காரில் ஏறச்சென்றபோது மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டதில் அவருடைய கழுத்தில் குண்டு பாய்ந்ததில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிழந்தார்!

ஆனால், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு திரும்பும்போது நடந்த தற்கொலைத் தாக்குதலில் பெனாசிர் புட்டோ கொல்லப்பட்டதாக ராவல்பிண்டி நகர காவல் அதிகாரி செளத் அஜீஸ் கூறியுள்ளார்!

ராவல்பிண்டியில் உள்ள லியாகத் பாத் பூங்காவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு வெளியே வந்து காரில் ஏறச் சென்றபோது சற்று தூரத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் பெனாசிர் புட்டோவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.

பெனாசிர் புட்டோ காரில் ஏறச்சென்ற போது அவரை நோக்கி 5 முறை சுடப்பட்டதாகவும், அதில் அவருடைய கழுத்தில் குண்டு பா‌ய்‌ந்ததாகவு‌ம் ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.

கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் சுய நினைவை இழந்தவராக பெனாசிர் புட்டோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அங்கு அவருடைய கழுத்தில் பாய்ந்த குண்டை அகற்ற நடந்த அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் நேரப்படி மாலை 6.16 மணிக்கு மருத்துவமனையில் பெனாசிர் புட்டோ உயிரிழந்தார்.

பெனாசிர் புட்டோ மருத்துவமனையில் அனுமதிக்க கொண்டு சென்றபோது அவரது காலிலும் காயங்கள் இருந்ததாகவும், அவைகளில் இருந்து ரத்தம் வெளியேறியதாகவும் கூறப்படுவதால், துப்பாக்கியால் சுட்டதும், தற்கொலைத் தாக்குதல் நடந்ததும் ஒரே நேரத்தில் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பெனாசிர் சுடப்பட்டதற்குப் பின்னரே தற்கொலைத் தாக்குதல் என்று கருதப்படும் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும் மாலிக் கூறியுள்ளார்.

பெனாசிரின் வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து 50 கெஜ தூரத்தில் குண்டு வெடித்ததெனவும், அப்பகுதியில் மனித உடல்களும், சதைப் பிண்டங்களும் சிதறிக் கிடந்ததாக செய்திகள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்