ஆஸ்ட்ரேலியா : விசா ரத்து வழக்கில் ஹனீஃப்பிற்கு வெற்றி!
Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (15:19 IST)
இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு உள்ளதாக குற்றம்சாற்றப்பட்டு அந்த நாட்டு அரசால் விசா இரத்து செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பெங்களூரு மருத்துவர் ஹனீஃப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, அந்நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான முழுஅமர்வு இன்று தள்ளபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு பிரிஸ்பேனில் பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோ படத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் அவர் மீண்டும் ஆஸ்ட்ரேலியா சென்று தமது மருத்துவப் பணியைத் தொடர முடியும் என்று ஹனீஃப்பின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மருத்துவர் ஹனீஃப்புக்கு இரத்து செய்யப்பட்ட விசாவை மீண்டும் வழங்க நீதிபதி ஜெஃப்ரி ஸ்பெண்டர்ஸ் அளித்த உத்தரவை எதிர்த்து ஆஸ்ட்ரேலிய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இவ்வழக்கு தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரிஸ்பேனில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மைக்கேல் பிளக்ஸ் ஒரு நாள் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையின் அடிப்படையில் இந்த தீர்ப்பை அவர் அறிவித்துள்ளார்.
கிளாஸ்கோ விமான நிலையம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளான சபீல், கபீல் அகமது ஆகியோருக்கு கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெங்களூரு மருத்துவர் ஹனீப் உதவி செய்ததாக ஆஸ்ட்ரேலிய அரசு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிரிஸ்பேனில் ஹனீப் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நன்னடத்தை விதிமுறைகளை ஹனீப் மீறியுள்ளதாக கூறி ஆஸ்ட்ரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ்,அவரின் 457 நாட்களுக்கான குடியேற்ற அனுமதியை (விசா) இரத்து செய்தார். இந்த உத்தரவால் ஹனீப் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப் பட்டார். இதையடுத்து ஹனீப் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஜெஃப்ரி ஸ்பெண்டர்ஸ் அளித்த தீர்ப்பு ஆஸ்ட்ரேலிய அரசுக்கு எதிராக அமைந்தது.