ஹின்ட்ராஃப் தலைவர்களை விடுவிக்கக் கோரி மொட்டையடித்துப் போராட்டம்!
Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (11:16 IST)
மலேசியாவில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை இன்றிக் கைது செய்யப்பட்டுள்ள ஹின்ட்ராஃப் அமைப்பின் தலைவர்கள் 5 பேரை விடுதலை செய்யக்கோரி, அவ்வமைப்பைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மொட்டையடித்துப் போராட்டம் நடத்தினர்.
தலைநகர் கோலாலம்பூருக்கு அருகில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பட்டு குகைக் கோயிலில் நடந்த இந்தப் போராட்டத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கோயிலில் கூடிய நூற்றுக்கும் அதிகமான ஹின்ட்ராஃப் தொண்டர்கள், மகாத்மா காந்தியின் புகைப்படங்களை ஏந்தி அமைதியாக முறையில் போராடிய தங்கள் அமைப்பின் தலைவர்களை அரசு விரைவில் விடுதலை செய்யவேண்டும் என்று வேண்டி தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மலேசியாவில் பரவலாகப் பேசும் மொழிகளில் மலாய், சைனீஸ், ஆங்கிலம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக 4வது இடத்தில் தமிழ் உள்ளது. இருந்தாலும், மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவழியினர் மற்றவர்களுக்கு இணையாக நடத்தப்படுவது இல்லை என்ற குற்றச்சாற்றும் உள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி, கோலாலம்பூரில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கூடி தங்களுக்குச் சம உரிமை கேட்டு தடையை மீறிப் பேரணி நடத்தினர். இதற்கு ஏற்பாடு செய்திருந்த ஹின்ட்ராஃப் அமைப்பின் தலைவர்கள் 5 பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.