பிரிட்டன்: விசா கெடுபிடிகள் அதிகரிப்பு!
Webdunia
புதன், 19 டிசம்பர் 2007 (11:36 IST)
அயல்நாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டில் நீண்ட நாட்கள் தங்குவதைத் தடுக்கும் வகையில் சுற்றுலா விசாவின் ஆயுட்காலத்தை 6 மாதத்திலிருந்து 3 மாதமாகக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு புதிய விதிகளை பிரிட்டன் அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
குறிப்பாக, பிரிட்டனில் வசிக்கும் குடும்பங்கள் அயல்நாடுகளில் வசிக்கும் தங்கள் உறவினர்களை பிரிட்டனுக்கு வரவழைக்க விரும்பினால், அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேறிவிடுவார்கள் என்று உத்தரவாதம் அளிக்கும் வகையில், பிரிட்டன் தூதரகத்தில் 1000 பவுண்டுகள் வைப்புத் தொகையாகக் கட்டவேண்டும் என்ற விதியும் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த விதியினால், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு இடம்பெயர்ந்து வசித்துவரும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
சுற்றுலா விசாவின் ஆயுட்காலம் 3 மாதமாகக் குறைக்கப்படுகிறது என்பதை அறிந்த அந்நாட்டு குடிமக்கள், பிரிட்டன் வரலாற்றில் இதுவரை இதுபோன்ற விசா கெடுபிடிகள் இருந்ததில்லை என்று கருத்து கூறியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்த பிரிட்டன் குடியேற்றத் துறை அமைச்சர் லியாம் பிர்னே, குறிப்பிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் காலங்கள் மற்றும் வணிகமுறைப் பயணத்திற்குத் தனிப்பட்ட விசா விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், விசா வழங்குவதில் புதிய விதிகளை அமல்படுத்துவதற்கு பிரிட்டன் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வைப்புத் தொகை கட்டுவது போன்ற விதிகளால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், பிரிட்டன் அண்மையில் அறிமுகம் செய்த, விசாவில் கைரேகை கட்டாயம் என்ற விதிமுறையின்படி, அயல்நாட்டுப் பயணிகளிடம் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கைரேகைகள் பெறப்பட்டுள்ளன.
விசா கெடுபிடி குறித்து அந்நாட்டு நாளிதழ்களுக்குப் பேட்டியளித்துள்ள அமைச்சர் லியாம் பிர்னே, பிரிட்டன் சுற்றுலாவுக்குச் சிறந்த இடம் என்பதோடு, எல்லா வசதிகளும் நிறைந்த மிகவும் பாதுகாப்பான இடம் என்பதை உறுதிப்படுத்தவே இதுபோன்ற விதிமுறைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன என்று கூறியுள்ளார்.