பாகிஸ்தானில் இன்று அதிகாலை பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 50 பேர் பலியாயினர். நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கராச்சியில் இருந்து லாகூருக்கு சென்று கொண்டிருந்த விரைவு ரயில், அதிகாலை 2.10 மணியளவில் கராச்சியில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள மெஹ்ராபூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டது.
இந்த விபத்தில் ரயில் பயணிகள் 32 பேர் நிகழ்விடத்திலேயே பலியானதாக முதல் தகவல்கள் தெரிவித்தன. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த 18 பேர் அடுத்தடுத்து இறந்ததால் பலி எண்ணிக்கை 50 ஐத் தொட்டுள்ளது. காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இவ்விபத்தில், ரயிலில் மொத்தமிருந்த 16 பெட்டிகளில் 12 பெட்டிகள் தடம் புரண்டன. அவை அனைத்துமே முழுமையாகச் சேதமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
ஈத்- உல்- அதா பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் திருமணக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் சிறப்பு பெட்டிகளில் பயணம் செய்தனர்.