அகிம்சை வழியில் போராடுவோம்: வேதமூர்த்தி!
சனி, 15 டிசம்பர் 2007 (18:27 IST)
மலேசியாவில் வாழ்ந்து வரும் பூர்வீக இந்தியர்களுக்கு சம உரிமைகளைப் பெற்றுத் தரும்வரைதங்களின் அகிம்சை போராட்டங்கள் தொடரும் என்று ஹின்ட்ராஃப் அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி கூறியுள்ளார்.
தற்போது லண்டனில் இருக்கும் வேதமூர்த்தி ஸ்டார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் அளித்துள்ள பேட்டியில், தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த 5 நிர்வாகிகளைக் கைது செய்துள்ளதால் இயக்கம் பலவீனம் அடைந்துவிடாது என்று கூறியுள்ளார்.
"எங்களின் தலைவர்கள் கைது செய்யப்படுவதன் மூலம் எங்களுக்குத் தலைமையில்லாமல் போய்விடும் என்று யாரும் கருத வேண்டாம். நானும், இன்னும் சிலரும் இணைந்து இந்திய வம்சாவழியினருக்கு அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தரும்வரை அகிம்சை வழியில் போராடுவோம்.
அதுவரை மலேசியாவில் உள்ள இந்தியர்களும், ஹின்ட்ராஃப் தொண்டர்களும் ஆத்திரப்படாமல் அமைதியாக இருக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைதியாக நடந்த பேரணியில் கைது செய்யப்பட்ட 31 இந்தியர்கள், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ள ஹின்ட்ராஃபின் 5 நிர்வாகிகள் ஆகியோரை விடுவிக்கும் முயற்சிகளை ஹின்ட்ராஃப் அமைப்பு தொடர்ந்து மேற்கொள்ளும்.
எங்களின் மூத்த நிர்வாகிகள் கைது செய்யட்டுள்ளதால், அரசின் மீது நாங்கள் மேலும் நம்பிக்கை இழந்துள்ளோம்" என்றார் அவர்.
தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் லண்டனில் இருந்துகொண்டு தீர்மானிக்கப்படும் என்ற வேதமூர்த்தி, தங்களது போராட்டத்திற்கு சர்வதேச ஆதரவைப் பெறுகின்ற முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.