பாகிஸ்தானில் நியாயமான தேர்தல் நடக்க வாய்ப்பில்லை: அமெரிக்கா!
வெள்ளி, 7 டிசம்பர் 2007 (13:23 IST)
பாகிஸ்தானில் நடக்கவுள்ள பொதுத் தேர்தல், முற்றிலும் வெளிப்படையான, நியாயமான தேர்தலாக நடக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்க அயலுறவு இணையமைச்சர் ரிச்சர்ட் பெளச்சர் கூறியுள்ளார்.
''இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு பயங்கரவாத எதிர்ப்புப் போருக்கு உதவி செய்யும் வகையில் 10 பில்லியன் டாலர் தொகையை அமெரிக்கா வழங்கியுள்ளது.
இதனால், பாகிஸ்தான் ஒரு ஜனநாயக நாடாக வெற்றிபெறுவது எங்களின் பாதுகாப்பு, எதிர்காலம் ஆகியவற்றுக்கும் மிகவும் அவசியமானது.
பாகிஸ்தானில் நடக்கவுள்ள பொதுத் தேர்தல் அந்நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதாக அமையவேண்டும். எனவே, தேர்தல் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், நாங்களும் விரும்புகிறோம்.
ஆனால், பொதுத் தேர்தல் முற்றிலும் வெளிப்படையான தேர்தலாக நடக்காது. இருந்தாலும், அமெரிக்காவின் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஒரு முன்னெற்றத்தைக் கொண்டுவரும்'' என்றார் ரிச்சர்ட் பெளச்சர்.
சர்வதேச நாடுகள் மேம்பாட்டிற்கான அமெரிக்க முகவாண்மையின் கூடுதல் மேலாளர் ஜேம்ஸ் குன்டெர் கூறுகையில், ''கடந்த 6 ஆண்டுகளில் பாகிஸ்தானில் நல்ல நிர்வாகம் அமைவதற்காகவும், அந்நாட்டு மக்களுக்கு நல்ல கல்வி, மருத்துவ வசதிகள் கிடைப்பதற்காகவும் 2.1 பில்லியன் டாலர் கொடுத்துள்ளோம்.
அதனால் எங்களின் ஒவ்வொரு ஆயுதத்தையும் பாகிஸ்தானில் வெளிப்படையான சுதந்திரமான தேர்தல் நடப்பதை உறுதி செய்வதற்காகப் பயன்படுத்துவோம்'' என்றார்.