பாகிஸ்தான் அரசியலில் மற்றொரு திருப்பமாக நவாஸ் ஷெரீஃப்பும் பெனாசிர் புட்டோவும் நேற்று சந்தித்து பேசினார்கள். இஸ்லாமாபாத்தில் உள்ள பெனாசிரின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது.
அப்போது தேர்தலை புறக்கணிக்கும்படி பெனாசிரிடம் நவாஸ் ஷெரீஃப் கேட்டுக் கொண்டார். இதற்கு பெனாசிர் தனது இறுதி முடிவாக எதையும் தெரிவிக்கவில்லை.
இதனால், அதிபர் முஷாரஃப்புக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்றும் தேர்தல் அமைதியாக வெளிப்படையாக நடக்க வாய்ப்பில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) ஆகிய கட்சிகளின் சார்பில் 8 உறுப்பினர்கள் கொண்ட கூட்டு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
''இந்த குழு விதிக்கும் நிபந்தனைகளை அதிபர் முஷாரஃப் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் ஏற்காவிட்டால் தேர்தலை இரண்டு கட்சிகளும் புறக்கணிக்கும். அந்த நிபந்தனைகள் என்ன என்பது 2 நாட்களில் அறிவிக்கப்படும்'' என்று நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.
முன்னதாக, ஜனவரி 8-ஆம் தேதி நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட நவாஸ் ஷெரீஃப் லாகூரில் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார்.
ஆனால் அவர் மீது குற்றவழக்கு இருப்பதாக கூறி அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.
இன்னொரு முன்னாள் பிரதமரான பெனாசிர் 3 தொகுதிகளில் மனுதாக்கல் செய்துள்ளார்.