பொதுத் தேர்தலில் பங்கேற்க நவாஸ் ஷெரீஃப் முடிவு!
Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2007 (14:52 IST)
''ஜனவரி 8 ஆம் தேதி நடக்கவுள்ள பொதுத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதில்லை'' என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி முடிவு செய்துள்ளது என்றும், இது தொடர்பாக முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
''பொதுத் தேர்தலில் கட்டாயமாகப் பங்கேற்க வேண்டுமென்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் மூத்த தலைவர்கள் மிகவும் வற்புறுத்தினர். இதையடுத்து தங்களின் ஆதரவாளர்களுடன் கலந்து பேசிய நவாஸ் ஷெரீஃப்பும், அவரின் சகோதரர் ஷபாஸ் ஷெரீஃப்பும், தேர்தலில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்'' என்று இஸ்லாமாபாத்தில் இருந்து வெளிவரும் நாளிதழ்கள் தெரிவித்துள்ளன.
தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளுக்கு அதிக வெற்றிவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிடக் கூடாது என்று நவாஸ் ஷெரீஃப்பிடம் அவரின் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மத்தியச் செயற்குழுக் கூட்டம் இஸ்லாமாபாத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவில் இருபிரிவாகப் பிரிந்து நின்றனர்.
பெரும்பாலான தலைவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். முஷாரஃப்பை எதிர்த்து போராடுவதற்காக தேர்தலைப் புறக்கணிப்பதைவிட, தேர்தலில் பங்கேற்று கட்சியை வளர்க்கலாம் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.