அரசியல் நெருக்கடிக்கு மேற்கத்திய நாடுகளும் காரணம்: முஷாரஃப்!
Webdunia
சனி, 1 டிசம்பர் 2007 (17:32 IST)
பாகிஸ்தானில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கு மேற்கத்திய நாடுகளும் காரணம் என்று அந்நாட்டு அதிபர் முஷாரஃப் குற்றம்சாற்றியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஏ.பி.சி. தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்துள்ள நேர்காணலில், ''ஏதாவது தோல்வி ஏற்பட்டால், அது பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட தோல்வியல்ல. ஆஃப்கானிஸ்தானில் நடந்த போரின்போது உடன்வந்த அமெரிக்கா பின்னர் பின்வாங்கிவிட்டது. பாகிஸ்தான் மட்டுமே தனியாகக் களத்தில் நின்றது'' என்றார்.
''நான் யாருடனும் எந்த ஒப்பந்தமும் வைத்துக் கொள்ளவில்லை. வெளிப்படையான பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய சூழலில் அவரவர் தகுதிக்கெற்ற இடத்தில் அவரவர் இருக்கிறோம்.
சொர்க்கமென்றாலும், நரகமென்றாலும் ஜனவரி 8 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடக்க வேண்டும். தேர்தலுக்கு பிறகு ஏற்படும் மாற்றங்கள் பற்றி நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். என்னால் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்கள் வருமென்றால் நான் விலகி விடுவேன்.
கடந்த 5 ஆண்டுகளில் என்னையும், எனது அரசையும் சாய்க்க எதிர்க்கட்சிகள் கடுமையாக முயற்சித்தன. ஆனால் அதை எதிர்த்து நாங்கள் போராடவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். போராட்டம் என்றால் எல்லாவற்றையும் முறிப்பது, எரித்து விடுவது. அதை அனுமதிக்க முடியாது. எனவே, யாராவது போராட முயன்றால் நாங்கள் தடுப்போம்'' என்றார் முஷாரஃப்.