கொழும்பு தாக்குதல்கள்: ஐ.நா. பொதுச் செயலர் கண்டனம்!
Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (12:43 IST)
சிறிலங்கா தலைநகர் கொழும்புவில் 17 பலியாவதற்கும், 37 பேர் படுகாயமடைவதற்கும் காரணமான இரட்டை தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரின் செய்தித் தொடர்பாளர் நியூயார்க்கிலிருந்து விடுத்துள்ள அறிக்கையில், ''இலங்கையில் நடந்துவரும் பயங்கரமான, பெருத்த சேதம் விளைவிக்கும் வன்முறைகள் முடிவுக்கு வரவேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசுப் படைகளும், தமிழீழ விடுதலைப் புலிகளும் தாக்குதல்களைக் கைவிட்டு அமைதி முயற்சிகளுக்குத் திரும்ப வேண்டும். அரசியல் கட்சிகள் இதற்கு உதவ வேண்டும்.
கொழும்பில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஐ.நா. பொதுச் செயலரின் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
மேலும், கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் ஐ.நா. உலக உணவுத் திட்ட அலுவலகம் சேதமடைவதற்குக் காரணமான சிறிலங்க விமானப்படையின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கும் பான் கி மூன் கவலை தெரிவித்துள்ளார்.