நவாஸ் ஷெரீஃப்புடன் கூட்டணி வைத்துக்கொள்ளத் தயார்: பெனாசிர் அறிவிப்பு!
Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (13:25 IST)
நவாஸ் ஷெரீஃப்பின் வருகையால் பாகிஸ்தானின் அரசியல் கலாச்சாரமும், ஜனநாயகமும் வலுப்பெறும் என்பதால் அவருடன் கூட்டணி வைத்துக்கொள்ள தயாராக உள்ளோம் என்று பெனாசிர் புட்டோ கூறியுள்ளார்.
லாகூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ, ''பாகிஸ்தானுக்குத் திரும்பியுள்ள நவாஸ் ஷெரீஃப்பை நாங்கள் வரவேற்கிறோம். அவரின் வருகை ஜனநாயகத்தையும், அரசியல் கலாச்சாரத்தையும் வலுப்படுத்தும்.
வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி உள்பட ஜனநாயகத்தை விரும்பும், முடிவெடுக்கும் சக்திவாய்ந்த எல்லா அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.
கடந்த காலத்தில் அமெரிக்கா சர்வாதிகாரத்தை ஆதரித்தது. தற்போது ஜனநாயகச் சக்திகளை ஆதரிக்கிறது. இது ஜனநாயகத்தை விரும்பும் எல்லோருக்கு ஊக்கமளிக்கிறது.
ஜனநாயகபூர்வமான அரசு அமைந்தால் உச்ச நீதிமன்றத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள எல்லா நீதிபதிகளும் மீண்டும் நியமிக்கப்படுவார்கள்'' என்றார்.
முன்னதாக பெனாசிர் புட்டொ, தெற்கு சிந்து பகுதியில் உள்ள இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.
பாகிஸ்தானில் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ள முஷாரஃப்பைக் கண்டித்து, தேர்தலைப் புறக்கணிப்பது உள்ளிட்ட போராட்டங்களை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.