முஷாரஃப்புடன் ஒப்பந்தமா? நவாஸ் ஷெரீஃப் மறுப்பு!
Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (12:37 IST)
அதிபர் முஷாரஃப்புடன் ரகசிய ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் பங்கேற்பதற்காக நாடு திரும்பியுள்ள நவாஸ் ஷெரீஃப், லாகூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் அதிபர் முஷாரஃப்புடன் அதிகார பகிர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஷெரீஃப், 'எதிர்க்கட்சியாகிய நாங்கள் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட உள்ளோம். எனவே, எனக்கு மக்களுடன்தான் ஒப்பந்தம் உள்ளதே தவிர அதிபர் முஷாரஃப்புடன் அல்ல' என்றார்.
சவுதி அரேபியாவில் தங்கியிருந்த நவாஸ் ஷெரீஃப், அரேபிய அரசரின் தனி விமானம் மூலம் ஞாயிறு மாலை 6.25 மணிக்கு லாகூர் வந்தடைந்தார்.
அவருக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி(என்) யின் தலைவர்கள் வரவேற்பளித்தனர். அப்போது, நவாஸ் ஷெரீஃப், ''நீதித்துறையையும், ஜனநாயகத்தையும் மீட்டெடுப்பதற்காக சர்வாதிகாரத்தை எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்தவுள்ளோம்'' என்றார்.