வங்கதேசத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு!
Webdunia
திங்கள், 19 நவம்பர் 2007 (12:59 IST)
வங்கதேசத்தில் 'சிதிர்' புயலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 2,300 ஆக உயர்ந்துள்ளது. 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான 'சிதிர்' புயல் கரையைக் கடந்த போது வங்கதேசத்தில் 25 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
சேதமடைந்த பகுதிகளில் தொலைதொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் மீட்புப் பணிகள் தாமதமடைந்துள்ளன. கடுமையாக சேறும் சகதியும் இருப்பதால் மீட்புப் பணி பாதித்துள்ளது.
சிறிய தீவுகள், கடற்கரை நகரங்களில் சுமார் 10,000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கலாம் என்று சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
''இறப்பு எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருகிறது. ராணுவம், கடற்படை உள்ளிட்ட அமைப்புகளுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 40,000 ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்'' என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் அப்துர் ராப் கூறியுள்ளார்.
அதேநேரத்தில் இதுவரை 2,300 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும், 11 மாவட்டங்களில் உடல்கள் முழுமையாக மீட்கப்படவில்லை என்றும் தனியார் தொலைக்காட்சி ஒன்று கூறியுள்ளது.
கடற்கரையோரத்தில் சுமார் 27 லட்சம் பேர் உணவு, குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். 15 லட்சம் பேர் வீடுகளை முழுமையான இழந்துள்ளனர்.