பாகிஸ்தானுக்கு இராணுவ உதவிகளை நிறுத்த வலியுறுத்தி அமெரிக்க காங்கிரசில் தீர்மானம்!

வெள்ளி, 16 நவம்பர் 2007 (13:19 IST)
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுவரும் அனைத்து வகையான இராணுவ உதவிகளையும், அந்நாட்டு இராணுவத்துக்கு விற்பனை செய்ய ஒப்புக்கொள்ளப்பட்ட இராணுவ தளவாடங்கள் அனைத்தையும் இரத்து செய்ய அமெரிக்க அதிபர் புஷ்சை வலியுறுத்தும் தீர்மானத்தை அமெரிக்க காங்கிரசில் அறிமுகம் செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கை அதிபர் பர்வேஸ் முசாரஃபின் அவசர நிலை பிரகடணத்தை நடைமுறைக்கு கொண்டு வந்ததை கண்டிக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரசின் மத்திய கிழக்கு - தெற்காசிய குழுவுக்கான தலைவரும், ஐனநாயக கட்சி மூத்த உறுப்பினருமான கேரி ஆக்கர்மேன் நேற்று இத்தீர்மானத்தை அமெரிக்க காங்கிரசில் அறிமுகம் செய்தார்.
பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா செயல்படுத்த நினைக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒருவரை நம்பியிருப்பது புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கும், செயல்பாட்டுக்கும் உள்ள இடைவெளியைக் காட்டுகிறது என்றுஅவர் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார்.
முசாரஃப் தனது பதவியில் தொடருவதற்காக அரசியல் நடைமுறைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதைக் புஷ் கண்டும் காணாமலும் இருப்பதாகவும், அங்கு ஐனநாயகத்தை நிலைநிறுத்துவதில் உள்ள பிரச்சனைகளை புஷ் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
இராணுவ தளபதி பதவியை விரைவில் துறப்பதாகவும், பாகிஸ்தானில் மீண்டும் ஐனநாயகத்தை நிலைநாட்டுவேன் என்றும் நிறைவேற்றாத, பொய்யான வாக்குறுதியை திரும்ப திரும்ப முசாரஃப் கூறி வருவதாகவும் ஆக்கர்மேன் குற்றம் சாற்றியுள்ளார்.
வடக்கு - தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள அல் கய்டா பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களுடன் முசாரஃப் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், இது நமது எதிரிகயை மேலும் பலப்படுத்த உதவும் என்று குற்றம் சாற்றினார்.
அணுசக்தி தொடர்பான இரகசியங்களை முசாரஃப் அரசில் உள்ள அதிகாரிகள் லிபியா, வடகொரியா, இரான் போன்ற நாடுகளுக்கு இரகசியமாக வெளிப் படுத்திவருவதாகவும் அவர் கூறினார். அதிபர் முசாரஃப் ஒவ்வொரு முறையும் தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ளும் போதும், அமெரிக்க அதிபரிடம் மட்டும் பாசாகி விடுகிறார்.
பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதத்தை அப்புறப்படுத்த யாருடைய அரசியல் ஒத்துழைப்புத் தேவையோ, அவர்களால் நாட்டுக்கு ஆபத்து இல்லாத நிலையிலும், தனது அரசுக்கு அவர்கள் வெளியில் இருந்தால் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதற்காக அது போன்றவர்களை எல்லாம் முசாரஃப் கைது செய்து சிறையில் அடைத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தானில் அரசியல் சட்டத்தை மீண்டும் நிறுவ வேண்டும், அவசரநிலை பிரகடணத்தின் போது கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், சுதந்திரமான ஊடகச் செயல்பாடுகளுக்கு அனுமதிப்பது, ஐனவரி மாதத்தில் திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவது, இராணுவ தளபதி பொறுப்பில் இருந்து விலகுவது உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முசாரஃப் மேற்கொள்ள வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டள்ளது.








வெப்துனியாவைப் படிக்கவும்