நிலவளம் சுருங்குவதால் ஆபத்து வருகிறது: ஐ.நா எச்சரிக்கை!
Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (18:45 IST)
மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்காக முறைகேடாகப் பயன்படுத்துவதால் சுருங்கிவரும் நில வளம் எதிர்காலத்தில் உலகத்திற்குச் சவாலாக மாறும், குறிப்பாக ஏழை நாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்சனை காத்திருக்கிறது என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் 4-வது உலகச் சுற்றுச் சூழல் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு விவரங்கள் நமக்கு எச்சரிக்கை விடுப்பவையாகவே உள்ளன.
கடந்த 1981-ஆம் ஆண்டு முதல் செயற்கைக்கோள் உதவியுடன் பூமியின் மாற்றங்களை ஆய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இதில், கிழக்கு சைபீரியா, கனடா, அலாஸ்கா பசுமைமாறாக் காடுகள், பாம்பாஸ், தென்கிழக்கு பிரேசில், தெற்கு சீனா, தென்கிழக்கு ஆசியா, ஆஃப்ரிக்காவின் அடிப்பகுதிகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள நிலமாற்றங்கள் கவலை அளிப்பவையாக உள்ளன.
மக்கள்தொகை பெருக்கம், பொருளாதார வளர்ச்சி, நகரமயமாக்கல் ஆகியவற்றால் உணவு, நீர், எரிபொருள், மூலப்பொருள் ஆகியவற்றின் தேவை அதிகரிக்கிறது. நிலவளத்தில் ஏற்படும் பற்றாக்குறை இந்தத் தேவைகளை நிறைவு செய்யும் முயற்சிகளைத் தடுக்கிறது.
ரசாயனப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் மண்வளம் கெடுவதும் அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் உள்ள பழைய தொழிற்சாலைப் பகுதிகளை ஆய்வு செய்கையில் இது நிரூபணமாகிறது. மண்ணரிப்பு, மண்ணில் உள்ள ஊட்டச்சத்து குறைவு ஆகியவை வேளாண் நிலங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகின்றன.
மண் அகற்றப்படும் பகுதிகளில் உற்பத்தி குறைகிறது. நீர் நிலைகளால் உருவாகும் படிவுகளை அகற்றுவதால் மண்வளம் குறைகிறது. இவற்றின் விளைவாக வேளாண் அடிப்படைக் கட்டமைப்புகளுக்கு மிகப்பெரிய சேதம் உருவாகிறது.
நில நடுக்கோட்டுக்குக் கீழ் உள்ள நாடுகள் மண்ணில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக ஆப்பிரிக்காவில் உள்ள சஹாராப் பாலைவனப் பகுதியில் தானிய விளைச்சலில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வேளாண் நிலங்களில் பயன்படுத்தப்படும் உரங்களின் மூலம் தானிய விளைச்சல் 16 மடங்கு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
அதே வேளையில் தொழிற்சாலைகள் நிறைந்த நகரங்களில் உள்ள நீர் நிலைகளில் அளவுக்கு அதிகமான ரசாயனம் கலந்துள்ளது. இந்த நீர் நிலங்களுக்குப் பாய்ச்சப்படும் போது பயிர்களுக்கும், மண்ணிற்கும் பாதிப்பு வருகிறது.
கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் வேளாண் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நிலங்களின் விகிதம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.
கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்க பகுதிகளில் 40 விழுக்காடு, மேற்கு ஆசியாவில் 37 விழுக்காடு, ஆசியா மற்றும் பசுபிக் பகுதிகளில் 2.5 விழுக்காடு வேளாண் நிலங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த 1980-ஆம் ஆண்டு உலக அளவிலான சராசரி உணவு உற்பத்தி ஹெக்டெர் ஒன்றுக்கு 2.5 டன்னாக இருந்தது. தற்போது அது 1.8 மடங்கு அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில் காடுகள் அழிப்பு அதிகரித்துள்ளது. காடுகளை அழித்து வேளாண்மை நடக்கிறது. நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் உள்ளிட்ட எல்லா வளர்ச்சிகளும் நடக்கின்றன.
1987-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு சராசரியாக 73,000 சதுர கிலோமீட்டர் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த ஆண்டு முதல் உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர் நகரங்களில் வசிக்கிறார்கள்.
பருவநிலை, கொள்கைகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பகிர்தலில் ஏற்பட்டுள்ள மாற்றம், மக்கள்தொகைப் பெருக்கம் ஆகியவற்றினால் முதலில் பாதிக்கப்படுவது நிலங்களின் பயன்பாடுதான்.
வடஅமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதிகள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளன. ஆனால் மற்ற பகுதிகளில் இன்றும் பசுமைமாறாக் காடுகள் வெப்பத்தினால் அழிகின்றன.
ஆண்டுதோரும் சராசரியாக 50,000 கி.மீ அடர்ந்த காடுகள் அழிக்கப்படுகின்றன. பகுதி பசுமைமாறாக் காடுகள் 30,000 சதுர கி.மீ அளவிற்கு அழிக்கப்படுகின்றன. மற்ற காடுகள் கவலைக்கு இடமான நிலையில் உள்ளன என்று ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அறிக்கையை ஐ.நாவைச் சேர்ந்த 390 வல்லுநர்கள் இணைந்து தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.