துபாய் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: அரசு பரிசீலனை!
Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (15:57 IST)
அயல்நாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய விகிதத்தை உயர்த்துவது பற்றி ஐக்கிய அரபு நாடுகள் அரசு பரிசீலனை செய்து வருகிறது.
துபாயில் கடந்த மாதம் 27-ஆம் தேதி குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி இந்தியத் தொழிலாளர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தினர். சுமார் 4,000 கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை ஆய்வுசெய்து அறிக்கை வழங்குமாறு தொழிலாளர் நல அமைச்சகத்திற்கு ஐக்கிய அரபு நாடுகள் அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள எல்லா வகையான தொழிலாளர்களுக்கும் முறையான வீட்டு வசதிகளை வழங்குவதற்கு விதிகளை உருவாக்க வேண்டும். இது தொடர்பாக உள்ளூர் நிர்வாகங்களுடன் ஆலோசனை நடத்தி அறிக்கை வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்றும், நலச்சட்டங்களின் விதிகளை எந்த முறையில் மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
சில நிறுவனங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தைப் பிடித்து வைத்துக்கொள்ள அனுமதிகேட்டு அளித்த கோரிக்கைகளை தொழிலாளர் நல அமைச்சகம் நிராகரித்து விட்டது.
விதிமுறைகளை மீறும் நிறுவனங்களைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படும். முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்.
வன்முறைகளினால் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுகிறது. நாட்டின் பாதுகாப்பிற்கும், ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் உருவாகிறது. எனவே போராட்டங்கள் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று அமைச்சகச் செயலர் ஹியூமித் பின் டீமாஸ் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு நாடுகள் அரசின் முடிவை இந்தியத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இந்தியத் தொழிலாளர் நல அலுவலகத்தின் இயக்குநர் வேணு ராஜமோனி கூறுகையில், அரசின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். அன்றாடச் செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ளதை அரசு உணரவேண்டும் என்றார்.