பாகிஸ்தானில் அதிபர் முஷரப் நெருக்கடி நிலை பிரகடனம் செய்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.
பாகிஸ்தானின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள வைக்கப்பட்டுள்ளார். நெருக்கடி நிலை பிரகடனம் மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெருக்கடி நிலையை பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தான் ராணுவம் ஏதாவது அசம்பாவித நடவடிக்கையில் ஈடுபடக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக முஷரப் அறிவித்துள்ளார்.
எனவே அதில் இருந்து தப்பிக்க தீவிரவாதிகள் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது. எனவே அதை தடுக்க எல்லை பாதுகாப்பு படையினரும் தயார் நிலையில் இருப்பதாக டைரக்டர் ஜெனரல் ஏ.கே. மித்ரா தெரிவித்தார். அதேபோல இந்திய உளவுத்துறையும் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.