தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் அமைந்துள்ள கிளிநொச்சியின் மீது சிறிலங்க விமானப்படை விமானங்கள் இன்று காலை நடத்திய தாக்குதலில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்!
இத்தகவலை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் செயலர் சோ. சீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று காலை 6 மணியளவில் எமது அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களும், லெஃப்டினன்ட் கர்னல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கேப்டன் நேதாஜி, லெஃப்டினன்ட் ஆட்சிவேல், லெஃப்டினன்ட் வாகைக்குமரன் ஆகியோரும் சிறிலங்க வான்படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்தனர் என்பதை தமிழீழ மக்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும், பன்னாட்டு சமூகத்திற்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்குப் பிறகு அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவராக திகழ்ந்த தமிழ்ச்செல்வன், சிறிலங்க அரசுடன் ஜெனீவா பேச்சில் கலந்துகொண்ட புலிகளின் குழுவிற்கு தலைமையேற்று பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.