கார்பன்-டை-ஆக்ஸைட் : ஐரோப்பிய யூனியன் முடிவு எதிர்வினையாகுமா?

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (13:32 IST)
தாவரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிபொருளை பயன்படுத்த ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது, மூன்றாம் உலக நாடுகளில் உணவு உற்பத்தி குறைவதற்கு காரணமாகிவிடும் என்று ஐரோப்பிய சமூக அமைப்புகள் கூறியுள்ளன.

பூமியின் வெப்ப நிலை மாற்றத்திற்கு காரணம் வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள்கள் சரிவர எரியாமலும், அதில் இருந்து வெளியாகும் புகையில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைட் கிரீன் ஹவுஸ் எனப்படும் வெப்பச் சூழலை உருவாக்குவதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வெப்பநிலை மாற்றத்தை தடுக்கவும், புவி வெப்பமாவதை தடுப்பதுடன் அண்டார்டிகா பகுதியில் பனி உருகுவதை தடுக்க கடல் நீர்மட்டம் உயர்வதை தடுக்க ஒரே வழி வெப்பச் சூழலை உருவக்கும் வாயுக்களை கட்டுப்படுத்துவதுதான் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஐ.நா., உலக நாடுகள் அனைத்தும் இந்த வெப்பச் சூழலை உருவாக்கும் வாயுக்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு வரும் 2020க்குள் எண்ணெய் பொருட்களில் இருந்து அதிகளவில் வெளியாகும் நச்சு வாயுவை கட்டுப்படுத்தும் விதமாக வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளில் 10 விழுக்காடு தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை சார்ந்த எரிபொருளாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து‌ள்ளது.

இந்த இலக்கை அடைய பல்வேறு நிறுவனங்கள் தாவர எண்ணெய் உற்பத்தியில் தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கும் நிலையில், வளரும் நாடுகளில் உள்ள வேளாண் நிலங்கள் இயற்கை தாவர எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும்.

இதனால் அங்குள்ள ஏழை மக்களின் அன்றாட உணவுக்கே அல்லல்படும் நிலை உருவாகும் என்பதால் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

வரும் 2020-க்குள் கார்பன்-டை-ஆக்ஸைட் நச்சுப் புகையை குறைப்பதற்கு தாவர எரிபொருள் மட்டுமே பிரதான தீர்வாகாது என்றும், இதனால் வளரும் நாடுகளில் வாழும் ஏழை-எளிய மக்களின் அன்றாட உணவுத் தட்டுப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல் ஐரோப்பிய யூனிய‌ன், இலக்கை எட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்